search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூளை பாதிப்பு"

    மூளை பாதித்த சிறுவனை கருணைக் கொலைக்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து உரிய முடிவு எடுக்க மருத்துவ நிபுணர்கள் குழுவை ஏற்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கடலூரைச் சேர்ந்தவர் திருமேனி. டெய்லர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகள்களும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனது மகன் பிறந்தது முதல் அவனால் பேச முடியவில்லை. அவனுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதால் மூளை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் அவன் குணமடையவில்லை. தற்போது அவனுக்கு தினமும் 20 முறை வலிப்பு ஏற்படுகிறது.

    இதை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் எனது குடும்பமே நிம்மதி இழந்து தவிக்கிறது. நோய் பாதிப்பை குணப்படுத்த முடியாத நிலையில் பாதிப்புக்கு உள்ளானவரை கருணைக் கொலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, எனது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று அந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சிறுவன் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளானா? என்பதை கண்டறியவும், அவனை கருணை கொலை செய்ய அனுமதிக்கலாமா? என்பது குறித்து முடிவு எடுக்கவும் தகுதியான மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக்குழுவில் இடம் பெறும் மருத்துவர்கள் 2 வாரங்களுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    அப்பல்லோ மருத்துவ மனையின் நரம்பியல் துறை பேராசிரியர் ரெஜினால்டு, ஓய்வு பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் ராமச்சந்திரன், மத்திய அரசின் சுகாதார திட்டங்களுக்கான தலைமை மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர் அந்த மருத்துவர்கள் குழுவை தேர்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    விசாரணை அடுத்த மாதம்(செப்டம்பர்) 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×